கள்ளக்குறிச்சிமாவட்டத்தைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர். இவர் தனது மகளை அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அப்பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்கும்போது உயிரிழந்தார்.
இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் தனது பிள்ளைகளை மாமனாரிடம் விட்டுவிட்டு, வெளி மாநிலம் சென்று மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில், தனது மகளின் இரண்டு பிள்ளைகளையும் முதியவர் வளர்த்து வந்தார். தற்போது,ஆண் பிள்ளைக்கு 17 வயதும் பெண் பிள்ளைக்கு 15 வயதும் ஆகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக முதியவர் தனது 15 வயது பேத்திக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக 15 வயது சிறுமி கர்பமாகியுள்ளார். இச்சம்பவத்தை மறைப்பதற்காக சிறுமியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொண்டார். இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் 65 வயதுடைய பெண்ணின் உதவியுடன், ஓய்வு பெற்ற செவிலி ஒருவரிடம் பேத்தியை கருக்கலைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
போக்சோவில் மூவர் கைது
அப்போது, அச்சிறுமிக்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் ஆற்றில் புதைத்தார். இந்த தகவல் ஊர்முழுக்க கசியத்தொடங்கியது. இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முதியவர், அவருக்கு உறுதுணையாக இருந்த 65 வயதுடைய பெண், சட்டவிரோத கருக்கலைப்பு செய்த ஓய்வு பெற்ற செவிலி ஆகிய மூவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!