கள்ளக்குறிச்சி:சங்கராபுரம் மோட்டாம்பட்டி அடுத்த கூடலூர் மலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க கூட கடைகள் கிடையாது.
இதுவரை கிராமத்திற்குப் பேருந்து வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை, கிராம மக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள மோட்டாம்பட்டி ஊராட்சிக்கு செல்ல வேண்டும்.
அப்படி வர வேண்டும் என்றால் நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் கிராம மக்கள் ஆபத்தை உணராத மக்கள்
இந்த வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் கூடலூர் பகுதியில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருளான பாலை கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் மணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டம் - விவசாயிகள் எதிர்ப்பு