கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பச்சைவேலி கிராம எல்லையில் அரசு அனுமதியின்றி சில நபர்கள் திருட்டுத்தனமாக கூழாங்கற்களைத் திருடி ஐந்து லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் ச. லக்ஷ்மி பிரியா, உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர் அலி ஆகிய அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற உதவியாளர்கள் அங்கிருந்த ஐந்து லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட ஐந்து லாரிகளும் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. விசாரணையில் திருடர்கள் அனுமதியின்றி கனிம வளங்களைச் சுரண்டி கொள்ளையடிப்பதை தொழிலாகவே வைத்திருந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.