கள்ளக்குறிச்சி:முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச்செயலாளர் இரா. குமரகுரு தலைமையிலான அதிமுகவினர் மேளதாளங்களுடன் மலர்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இன்றைய தினம் கழகத்திற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என உங்கள் குரல் ஒலித்தது; உங்கள் குரல் ஒலியின் காரணமாக ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அழிக்க வேண்டும் என்று செய்த சதியினால்தான் கடந்த காலத்தில் நம்மால் ஆட்சியினைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்றைக்கு யார் யாரெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருவதற்குத் தடையாக இருந்தனரோ அந்தத் தடைக் கற்களை எல்லாம் உடைத்து எறிந்துள்ளோம்.
அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிவார்கள்: தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் ஸ்டாலின், அதிமுகவை முடக்கப் பார்க்கிறார். இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான். 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது.