கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரியான சம்பத், கடந்த டிசம்பர் 12அன்று கோயிலில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று (டிச.19) காலை சம்பத் வழக்கம்போல் கோயிலுக்குப் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது கோயில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததைப் பார்த்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சங்கராபுரம் காவல் துறையினர், கோயிலில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர்.
இதில் மொத்தம் 17,000 ரூபாய் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உண்டியலை உடைத்து திருடிச் சென்றவர்கள்தான் பணத்தை மீண்டும் கோயிலில் வீசியுள்ளனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'ஏலே... லைட்ட அமத்துல'; வடிவேலு பாணியில் விசாரணை செய்து நகையை மீட்ட காவல்துறை