கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள குதிரைச்சந்தலில் அமைந்துள்ளது நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்து இந்தாண்டு பள்ளியைவிட்டுச் செல்லும் காரணத்தால், முதுநிலை தமிழாசிரியையான துரைமணிமேகலை, அம்மாணவர்களிடம் நிறை, குறைகளைக் கடிதமாக எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
பள்ளியுடனும், ஆசிரியர்களுடனுமான தங்களது அனுபவங்ளை மாணவர்கள் அக்கடிதங்களில் பகிர்ந்துகொண்டனர். அவற்றை எல்லாம் படித்து நெகிழ்ந்துகொண்டிருந்த ஆசிரியை மணிமேகலையை, ஒரு மாணவியின் உருக்கமான கடிதம் மட்டும் வெகுவாகப் பாதித்தது.
மாணவி ஹிரானி என்பவர் எழுதிய அக்கடிதத்தில், "இப்பள்ளியில் படித்ததில் நாங்கள் பெருமையடைகிறோம். அதேவேளையில் பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையிலும், பயன்படுத்த முடியாத மோசமான நிலையிலும் இருக்கிறது.
மேற்கூரை இல்லாத அந்தச் சிறிய கழிப்பறையில், சானிட்டரி நாப்கின் எந்திரம் செயல்படவில்லை. மேலும், தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். இந்தாண்டு படிப்பை நாங்கள் முடித்துவிட்டாலும்கூட, இனி இங்கு படிக்கும் மாணவிகளாவது சுகாதாரமான கழிப்பறையைப் பயன்படுத்தும்வகையில் சீரமைத்துத் தர வேண்டும்" என எழுதியிருந்தார்.