கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம், சின்னகுப்பம், மூலசமுத்திரம், நெய்வணை, மாம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுவருகிறது.
வண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அழகு இளங்கோ விவசாயம் செய்துவருகிறார். இவர் தனது நிலத்தில் பயிரிட்ட வெண்டைக்காய்களை அறுவடை செய்துள்ளார்.
வெண்டைக்காய்களை இலவசமாக வழங்குவது தொடர்பான காணொலி போக்குவரத்துச் செலவுக்குக்கூட போதாத விலை
இருப்பினும் வெண்டைக்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தனது நிலத்தில் விளைந்த ஏழாயிரம் கிலோ வெண்டைக்காய்களை வாகனங்களில் ஏற்றிவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இது குறித்து விவசாயிகள் பேசுகையில், “கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், அறுவடை செய்யப்படும் காய்கறிகளை பெருநகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்க முடியாமல் நஷ்டத்திற்குள்ளானோம்.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அறுவடை செய்யப்படும் காய்கறிகளின் விற்பனை விலையானது, அவற்றை சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்து செலவுக்குக்கூட போதவில்லை.
கொட்டுவதைவிட, கொடுப்பது சிறந்தது
நிலத்தில் விளைந்த காய்கறிகளை ஆடு, மாடுகளுக்கு இரையாகத் தருவதோடு, நீர்நிலைகளில் வீணாகக் கொட்டிவருகிறோம்.
விளைந்த காய்கறிகளை குப்பையில் கொட்டி வீணாக்குவதைவிட, பொதுமக்களுக்கு வழங்குவதே சிறந்தது என்ற அடிப்படையில் இலவசமாக வழங்குகிறோம். அரசு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் இலவசமாக வழங்கிய வெண்டைக்காய்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றபோதும், நஷ்டமடைந்த விவசாயியின் நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க:மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல - கிங் காங்கை காதலித்த பெண்