கள்ளக்குறிச்சி : தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. வேட்புமனு மீதான பரிசீலனை நேற்று (செப்.23) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வேட்புமனு நிராகரிப்பு
அதன்படி, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலனையில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் முறையான விளக்கம் அளிக்காததை கண்டித்தும், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தலைமையில் அதிமுகவினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.