கள்ளக்குறிச்சி:ஏமப்பேர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி கந்தசாமி. இவரது மகன் வெங்கடேஷ் (14). அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 20 தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் தனது வீட்டில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள ஏரி பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, ஏரியில் தனியார் ரைஸ் மில்லிருந்து கொண்டுவரப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டிருந்த நெருப்புடன் கலந்த சாம்பலில் சிறுவன் வெங்கடேஷ் தவறி விழுந்தார். இதில், அவருக்கு பயங்கர தீ காயம் ஏற்பட்டது. பின்னர், காயங்களுடன் வீட்டிற்கு வந்த சிறுவன் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு
இதையடுத்து சிறுவனை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்பு அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன், இன்று (ஆக. 22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர், வெங்கடேஷின் பெற்றோர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தனியார் ரைஸ் மில் உரிமையாளர் மீது புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஏமப்பேர் ஏரியில் நெருப்புடன் கலந்த சூடான சாம்பலைக் கொட்டி வைத்த தனியார் ரைஸ்மில் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெறி நாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு