தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி! - ஈரோட்டில் யோகா பயிற்சி
ஈரோடு: தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி துறையினர், அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கக் கூடிய யோகா, கொல்லம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கரோனா வைரஸ் நோய் வெகு வேகமாகப் பரவிவருகிறது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு யோகாவில் பயிற்சி இருப்பதாகவும், முறையாக யோகாவைக் கற்றுக் கொண்டு பயிற்சி மேற்கொண்டால் அதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் மாநிலம் முழுவதும் தன்னார்வ அமைப்பினர்கள் உதவியுடன் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கான யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் களப்பணியாளர்களாக ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சித்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஈரோட்டைச் சேர்ந்த உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கிடும் யோகாவை கற்றுக் கொடுத்திடும் வகையில் முறையான யோகா பயிற்சியாளர்களைக் கொண்டு நடைபெற்ற முகாமில் அனைவருக்கும் புரிந்திடும் வகையில் எளிமையான வகையில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.