தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பில், பெண்கள் தங்கும் விடுதிகளை வலுப்படுத்துதல், கண்காணித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாநில மகளிர் ஆணையத் தலைவர் பேசிய காணொலி இதில், மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்யநாதன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், ”வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் விடுதிகளில் தங்கி அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள 46 பெண்கள் விடுதிகளில் மூன்றாயிரத்து 180 பேர், பணிக்குச் செல்லும் பெண்கள், மாநிலம் முழுவதும் பெண்கள் விடுதிகளில் ஐந்து லட்சம் பெண்கள் தங்கி பணிக்குச் செல்கின்றனர்.
விடுதிகளில் தங்கிப் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதும், விடுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அரசின் கடமை. விடுதிகளின் வசதிகளை மேம்படுத்திடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஈரோட்டில் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன்கூடிய விடுதிகளை அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு தொடங்கிய பின்னர், திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புடன் கூடிய விடுதிகள் தொடங்கப்படும்” என்றார்.
முன்னதாக, மாநில பெண்கள் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்யநாதன் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெண்கள் விடுதிகளில் ஆய்வுமேற்கொண்டார். விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து விடுதி நிர்வாகிகளிடம் ஆலோசித்தார்.
இதையும் படிங்க: இறுதி சடங்கை நாங்க செய்றோம்; ஏழை மக்களை காக்க வந்த சிறகுகள்!