ஈரோடு:கனிராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஏடிஎம் இயந்திரத்தின் ஒயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் பேரில், காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்.
அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அந்த பெண்ணை ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே இழுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், அந்தப் பெண் நசிமா பானு என்பதும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகன் உடன் வசித்து வருவதும் தெரிய வந்து உள்ளது.
மேலும், தறிப்பட்டறை தொழிலாளியான நசிமா பானு, பல்வேறு இடங்களில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்து வந்து உள்ளதாகவும், இந்த நிலையில்தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்று உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.