தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வாகனத்தை அசைத்து பார்த்த யானை: பண்ணாரி சோதனை சாவடியில் அட்டகாசம்

ஈரோடு: பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நின்றிருந்த சரக்கு வாகனத்தை காட்டு யானை ஒன்று தனது தும்பிக்கையால் முட்டித் தள்ள முயற்சி செய்தது. வாகனங்கள் ஒலி எழுப்பி யானையை விரட்டின.

elephant
elephant

By

Published : Oct 9, 2021, 11:40 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இரு மாநில எல்லையான பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை, வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்தச் சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சம்மந்தப்பட்ட துறை ஊழியர்கள் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை (அக்.8) வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.

சரக்கு வாகனத்தை தள்ளிய காட்டு யானை

அப்போது யானை சோதனைச்சாவடி அருகே வாழைக்காய் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று நின்றிருப்பதை கண்டது. அந்த வாகனம் அருகே சென்று வாழைக்காயை எடுப்பதற்காக சென்ற யானை தனது தும்பிக்கையால் வாகனத்தை முட்டி கீழே தள்ள முயற்சி செய்தது.

இதைப்பார்த்த சோதனைச்சாவடி பணியாளர்கள் யானையை விரட்ட முயற்சித்தனர். இதில் ஆத்திரமடைந்த யானை அவர்களை விரட்ட ஆரம்பித்தது. இதனால் பணியாளர்கள் பயந்து ஓடினர்.

பின் சோதனை சாவடியில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த யானையை சாலையில் வந்த வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பி அதை வனப்பகுதியில் விரட்ட முயற்சித்தனர். மேலும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதியில் விரட்டினர்.

இதனால் சோதனைச்சாவடி பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்ணாரி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் காட்டு யானை நடமாடிய சூழ்நிலையில் இன்று பகல் நேரத்திலேயே சோதனைச் சாவடி பகுதியில் யானை நடமாடியதால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.

இதையும் படிங்க: நீருக்குள் விளையாட்டு - திடீரென வேலையை காட்டிய யானைகள்

ABOUT THE AUTHOR

...view details