தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. வரதட்சணை கேட்டு கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் - ஈரோட்டில் நடந்தது என்ன? - erode news

Wife murdered by Husband: கோபிசெட்டிபாளையம் அருகே காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில், கணவன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Three arrested in murder case
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 11:12 AM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூமாண்டகவுண்டனூரைச் சேர்ந்த விவசாயியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பி.இ பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சில காரணங்களால் இவர்களது காதலை பூரணியின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும், தங்களின் எதிர்ப்பை மீறி திருமனம் செய்து கொண்டால் சொத்தில் பங்கு தர மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பூரணி கடந்த ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதலன் மதன்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பூரணிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த பூரணி, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவரை சிசிச்சைக்காக சேர்த்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரின் சடலத்தை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் பூரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதில் பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கவுந்தபடி காவல்நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தச் சென்றபோது, குடும்பத்துடன் மதன்குமார் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று (டிச.12) ஒத்தகுதிரை என்ற பகுதியில் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்கள்:இந்த விசாரணையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பூரணி திருமணம் செய்து கொண்டதால்பூரணியிடம் பேசுவதை அவரது பெற்றோர் தவிர்த்து உள்ளனர். ஆனால் திருமனத்திற்குப் பிறகு பலமுறை வரதட்சணை கேட்டு மதன்குமார் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து அவரது பெற்றோர் மகளையும், பேத்தியையும் பார்க்கச் சென்றபோது, சொத்து கிடைக்காத விரக்தியில் மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் பூரணியின் பெற்றோரிடம் சண்டையிட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.

மேலும், பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மனைவி பூரணியிடம் கூறியபோதும், அதை அவர் ஏற்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடந்த மதன், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும், போலீசார் கோபியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் பொதுப்பணித்துறை பொறியாளர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details