சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு மூத்த நிர்வாகியும், ஈவெரா திருமகனின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனைக் களமிறக்கியுள்ளது. அவருக்கு ஆதரவாக திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர் முத்துசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஏற்கனவே தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், அமமுக சார்பில் விளையாட்டு வீரரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளருமான சிவபிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் மாநில நிர்வாகியான மேனகாவை வேட்பாளராக அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆனால், அதிமுக கூட்டணியில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் உள்ளது. இடைத்தேர்தலுக்கான தொடக்கத்திலேயே அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்திருந்தனர்.