சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 215ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ தனியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர் தியாகி தீரன் சின்னமலை. முழு ஊரடங்கு காலத்திலும் அரசின் அனுமதியுடன் தீரன் சின்னமலையின் வீரவணக்க நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுதான் நமது தலையாய கடமையாகும்.
சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களை சாதி அமைப்புகளுக்குள் அடக்கி பார்க்கும் அவலம் அரங்கேறுவது வருத்தம் அளிக்கிறது. சாதி, மத பாகுபாடோடு தலைவர்களின் சிந்தாந்தங்களை பார்க்கும் மதவாத சக்திகளின் போக்கு தலைதூக்கி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.