ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து நன்செய் பாசனத்துக்கு இன்று கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீரும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தப்பட்டு சனிக்கிழமை காலைக்குள் இரண்டாயிரத்து 300 கனஅடி நீரும் திறந்துவிடப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் உயர்மட்ட நீர் கொள்ளளவு 105 அடியாக நீர் இருப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பவானி ஆற்றிலும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஐந்தாயிரத்து 193 கனஅடியாகவும் அணையிலிருந்து கால்வாயிக்கு ஆயிரத்து 300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை-விடுத்துவந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பிரதான வாய்க்கால், சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலுக்கு கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். இன்று திறக்கப்பட்ட தண்ணீர், டிசம்பர் 11ஆம் தேதி அதாவது 120 நாள்கள் வரை நெல்சாகுபடிக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திறந்துவிடப்பட்ட கால்வாய் நீர், 124 மைல் பயணித்து கடைமடைப் பகுதியான காங்கேயம் மங்களப்பட்டியை ஐந்து நாள்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.