ஈரோடு: மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழுகொள்ளளவை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் 9,522 கனஅடி உபரி நீர் அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் அணைக்கு வந்து சேர்வதால் அணையின் நீர்வரத்து 1,822 அடியில் இருந்து 9,233 அடியாக அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 96.62 அடியில் இருந்து அரை அடி உயர்ந்து 97.12 அடி ஆனது. மேலும் பில்லூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானிசாகர் வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாத கணக்கின்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும்போது, அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படும் என்பதால், மேல்மதகு ஷட்டர்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விதை மானியத்தை உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை