நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இது வினாடிக்கு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடியாகவும், குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 523 கனஅடியாகவும் நீர்வரத்து உள்ளது.
பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தன்குட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.69 அடியாகவும், நீர் இருப்பு 8.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 870 கனஅடியாகவும், வெளியேற்றம் 205 கனஅடியாகவும் இருந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வருவதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி ஆகிய விவசாய பாசனத்துக்கு மொத்தம் 37 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்கான 12.3 டிஎம்சி இருப்பு இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இயலும். ஆனால், தற்போது அணையில் 8.8டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.