ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானி அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பவானி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 600 கன அடி நீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் 200 கன அடி குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.