தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஈரோடு, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட சில தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் வரும் 19ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதசாகு அறிவித்தார்.
மறுவாக்குப்பதிவு: மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு - தேர்தல் ஆணையம்
ஈரோடு: காங்கேயத்தை அடுத்த திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ள நிலையில், ஈரோட்டில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காங்கேயத்தை அடுத்த திருமங்கலத்தில் உள்ள 248ஆவது வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குபதிவு நீக்கம் செய்யப்படாமல் வாக்குபதிவு நடைபெற்ற காரணத்தினால், இந்த மையத்தில் மட்டும் மறு வாக்குபதிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க உள்ள 936 வாக்காளர்களுக்கு தேவையான ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு எண்ணும் இயந்திரம், விவிபேட், போன்றவற்றை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கதிரவன் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவையனைத்தும் இன்று அந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.