ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள டி.என். பாளையம் வனப்பகுதியிலிருந்து வழி தவறிச் சென்ற பெண் புள்ளிமான் ஒன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது.
அப்போது, தெருநாய்கள் துரத்தியதில் பயந்து ஓடிய புள்ளிமான் அருகிலுள்ள விவசாய நிலத்தில் உள்ள முள்கம்பி வேலியில் சிக்கிக்கொண்டு துடித்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்துவந்த வனத் துறையினர் காயமடைந்த புள்ளிமானை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவ மையத்திற்கு கொண்டு வந்தனர்.
காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்
அங்குள்ள வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன் புள்ளிமானை பரிசோதித்து பார்த்ததில் மானின் பின்னங்கால் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் அசோகன் காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தார். தற்போது புள்ளிமான் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.