ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அன்னை இந்திரா நகர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க முள்வேலி அமைத்த கிராமம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையக்கூடாது என சாலையின் குறுக்கே முள்வேலி அமைத்த கிராம மக்களின் செயலை அரசு அலுவலர்கள் பாராட்டி வருகின்றனர்.
தனிமைப்படுத்துதலை வலியுறுத்தும் விதமாக அன்னை இந்திரா நகர் கிராம மக்கள் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலைகளிலிருந்து கிராமத்திற்குள் நுழையும் பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்பு அரண் அமைத்து தடுத்துள்ளதோடு முள்வேலி அமைத்து வாகனங்கள் கிராமத்திற்குள் செல்லாதபடி கற்களையும் வைத்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநபர்கள் கிராமத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என எழுதி வைத்துள்ளனர். நகரப்பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சிலர் சுற்றுத்திரியும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதை கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் பாராட்டி வருகின்றனர்.