12 ஆண்டுகளுக்கு பின் நிறைந்த நல்லூர் குளத்தால் கிராம மக்கள் கொண்டாட்டம் ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த நல்லூர் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. வறட்சியான இப்பகுதியில் போதிய நிலத்தடிநீர் இல்லாததால், மானாவாரி பயிரான நிலக்கடலை, சோளம் பயிரிடுவது வழக்கம். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாகக் கொண்ட இக்கிராமத்தில், 60 ஏக்கர் நிலப்பரப்பில் நல்லூர் குளம் உள்ளது.
அண்மையில் பெய்த மழையால் பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த நீர், நல்லூர் குளத்துக்கு வந்து சேர்ந்ததால் நல்லூர் குளம் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இதனால் 800 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 100 அடியில் கிடைக்கிறது. விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால், விவசாயிகள் மானாவாரி பயிரிலிருந்து மாறி வாழை சாகுபடி செய்ய துவங்கிவிட்டனர்.
தற்போது ஊராட்சி சார்பில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து கிராமங்களுக்கு விநியோகிப்பதால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் பிரச்னை தீர்ந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பின் நல்லூர் குளம் நிரம்பியதால், குளத்தையொட்டியுள்ள கன்னிமார கருப்பரானன் சுவாமிக்கு, ஊர் மக்கள் சார்பில் கிடா வெட்டி விருந்து படைத்து கொண்டாடினர்.
மேலும், வருண பகவானை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இக்குளத்தில் 2 ஆண்டுகள் வரை தண்ணீர் வற்றாமல் தொடர்ந்து நீர் கிடைக்கும் என நல்லூர் ஊராட்சித் தலைவர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு விஷால் விளக்கம்!