ஈரோடு :இது குறித்து விக்கிரமராஜா செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "ஜிஎஸ்டிக்கு முன் வாட் வரியின்போது வணிகர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதைச் சமாதான குழு அமைத்துத் தீர்வுகாண வலியுறுத்தினோம். அதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சமாதான திட்டத்தை அறிவித்துள்ளார்.
மாநகரில் சீர்மிகு நகரம் திட்டத்தில் சந்தைக் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும்போது, அங்கேயே கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் கடை வழங்கி நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். மாவட்ட வாரியாகச் சீரான வாடகை விகிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24) முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைவைத்துள்ளோம்.
மீண்டும் தொழில் தொடங்க ஏற்பாடு
இதற்காக ஒரு குழுவை அமைத்து, ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்குக் கடைகளை வழங்கிவிட்டு, மீதமுள்ள கடைகளை மட்டுமே ஏலம்விட வேண்டும் என அறிவித்துள்ளார். இதன்படி ஈரோட்டிலும் அரசு மூலம் கட்டப்படும் சந்தைக் கடைகளை ஏற்கெனவே வைத்திருந்தவர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்து, அதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும்.
வணிக நலவாரிய உறுப்பினர்கள், 10 லட்சம் பேரைச் சேர்க்க நாங்கள் முயன்றுவருகிறோம். ஈரோட்டில், ஆயிரம் பேரை உறுப்பினராக்க முயல்கிறோம். நலவாரியத்தில் ஜிஎஸ்டி பதிவு உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும் என்பதை மாற்றி, சாமானியர்களும் உறுப்பினராகலாம் எனச் சாதகமான நிலையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கரோனாவால் வணிகத்தை இழந்த வியாபாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு எங்கள் அமைப்பு மூலமும், வங்கிக் கடன் பெற்றுத்தந்து மீண்டும் தொழில் தொடங்க ஏற்பாடு செய்துவருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் வாடகை கட்டடம் பெற்று வணிகம் செய்வோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகை செலுத்த நிர்பந்திக்கின்றனர். கரோனா காலம் என்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும். குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
பான் மசாலா, குட்கா போன்று தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்வோர் குறித்து, காவல் கண்காணிப்பாளர்களிடம் நாங்களே புகார் செய்து பிடித்துள்ளோம். பிடிபட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து விற்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இவற்றின் விலையேற்றத்தால் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும். எனவே இவற்றின் விலையை அதிகரிக்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். சுங்கச்சாவடி கட்டணத்தையும் அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தினால் உரிமம் ரத்து - மாநகராட்சி எச்சரிக்கை