ஈரோடு: லட்சுமி விலாஸ் வங்கி அதிக இழப்புகளைச் சந்தித்துவருவதால், வங்கி மோசமான கட்டத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியின் இழப்பு அதிகமாவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு, அந்த வங்கியின் நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடையை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள், அந்த வங்கியிலுள்ள அவர்களது கணக்கில் இருப்பிலுள்ள பணத்தை எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாதமொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுக்க முடியுமென்றும், அதற்குமேல் எடுக்க முடியாது என்றும், தேவையென்றால் அடுத்த மாதம் தான் பணம் எடுக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளும், அறிவிப்புகளும் ஈரோடு லட்சுமி விலாஸ் வங்கியின் பிரதான கிளையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை பீதியும், அதிர்ச்சியையும் அடைய வைத்திருக்கிறது. இதற்கிடையில், வங்கி திவாலாகி விட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கியதால், காலை முதல் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் வங்கியின் நிலை குறித்து விசாரித்தனர்.