ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு மாட்டுப் பொங்கலையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை 600 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல்லால் அருவிபோல் தண்ணீர் கொட்டும் நிலையில் கட்டப்பட்ட தடுப்பணை அருவியாகும். பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து அருவியாக விழுந்து கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த தடுப்பணை அருவிக்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை தினங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழர்களின் முக்கிய பண்டிகையாக அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் மாட்டுப்பொங்கல் தினமான இன்று, கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொடிவேரி அணைப்பகுதியில் குவியத்தொடங்கினர்.