ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகம். காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வழக்கம்போல் அதிகாலையில் காய்கறி வியாபாரத்திற்கு சென்றுள்ளார்.
வீட்டில் அவரது மனைவி சுமதி கதவைத் திறந்து வைத்தபடி தூங்கியுள்ளார். இதை அறிந்து அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுமதியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனர்.
கைது
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (ஜூலை 18) புஞ்சைபுளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வாகனத்தில் வந்த மூன்று பேரை விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் அடைப்பு
இதில் பவானிசாகர் அண்ணாநகரைச் சேர்ந்த கோஸ் மணி (எ) தினேஷ்குமார் (20), சரக்கல் (எ) அய்யாசாமி (21), சீனு(எ) திருமலை (21) என்பதும் இவர்கள் சுமதியின் நகையைச் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தனியார் நிறுவன காவலாளி கொலை