ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட மூலப்பாளையம், ரங்கம்பாளையம், கே.கே.நகர், திண்டல், ரகுபதி நாயக்கன்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில், ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. இதன்பேரில், ஈரோடு டவுன் - சப் டிவிஷனுக்கு உள்பட்டப் பகுதியில் பகல், இரவு ரோந்துப் பணியினை தீவிரப்படுத்தி, சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு தாலுகா போலீசார் இரவு நேர ரோந்தின்போது ரங்கம்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த நபர் முன்னுக்குப் பின்னாக முரணான பதில்களை அளித்துள்ளார். எனவே, அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதன்பேரில் அவர், தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை பகலில் நோட்டம் விட்டு, இரவில் கொள்ளையடிப்பதை சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் அளித்த தகவலின்பேரில், இளைஞர் சூர்யாவுடன் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி பாரதி, அதே தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த மணி, அவரது மனைவி மீனா மற்றும் விஜய், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை இன்று (மே 25) போலீசார் கைது செய்தனர்.