ஈரோடு கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவர், நேற்றிரவு (அக்14) பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பேருந்து நிலையம் பின்புறமாக உள்ள இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரை மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த இரண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்ப ஓட முயற்சித்தனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியிலிருந்த காவல்துறையினர் அவ்வழியாக வரவே சந்தேகப்படும் வகையில் தங்களை வேகவேகமாகக் கடந்த மூன்று இளைஞர்களையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதனிடையே காவலர்களை அணுகிய நடராஜ் தன்னைக் கத்தியைக் காட்டி மிரட்டி தன்னிடமிருந்து பணம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்ததாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மூவரையும் மாநகரக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஈரோட்டைச் சேர்ந்த கார்த்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தங்களது செலவுக்குப் பணமில்லையென்றால் இதுபோல் மதுபோதையில் வழிப்பறி செய்து வருவதை வழக்கமாக கொண்டு வருவதாக தெரியவந்தது. தற்போது கைதான மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:குன்னம் அருகே நகை அடகுக் கடையில் திருட்டு!