ஈரோடுமாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி தில்லை நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு மதுபிரியர் ஒருவர் மது வாங்க சென்று உள்ளார். 130 ரூபாய் விலை உள்ள இரண்டு மதுபான பாட்டிலை வாங்கி உள்ளார். பணியில் இருந்த விற்பனையாளர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டுள்ளார்.
எதற்கு கூடுதலாக, கேட்கிறீர்கள் என மதுபிரியர் கேட்டதற்கு இப்போதெல்லாம் ஐந்து ரூபாய்க்கு மேல் நாங்கள் அதிகமாக பணம் வாங்குவதில்லை என விற்பனையாளர் கூறி உள்ளார். மேலும், கூடுதலாக பணம் வாங்க வேண்டாம் என அமைச்சர் கூறியுள்ளாரா? என கேட்டதற்கு, வீடியோ எடுத்து அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கொள் என கடை ஊழியர் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், கூடுதலாக பணம் யார் வாங்க சொன்னது? என மதுபிரியர் கேட்டதற்கு, கடை உரிமையாளருக்கு வாடகை கட்டுவதற்கு நாங்கள் தான் கூடுதலாக வசூல் செய்கிறோம். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள் எனவும், அதிகாரிகள் என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என விற்பனையாளர் கூறியுள்ளார்.
மேலும், விற்பனையாளரின் பெயரைக் கேட்டதற்கு பெயர் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவிட்டு, பின்னர் என் பெயர் நடராஜ் எனக் கூறுகிறார். இது குறித்து மதுபிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மதுபிரியர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.