ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அக்கூர் ஜோரை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை மாதஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது.
அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிரை காட்டு யானை சேதப்படுத்தி, ஊருக்குள் நுழைந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜீரஹள்ளி வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை மாதஹள்ளியில் இருந்து தமிழ்புரம் செல்லும் தார்சாலை வழியாக ஓடியது.