சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, பெரியகுளம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கிப் பூக்கள் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது.
நாளை மறுநாள் (ஜன.28) தைப்பூச விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளதால் கோயில் வழிபாடு, சுவாமி அலங்காரம், திருமணமாலை, அலங்கார மாலை போன்ற பூமாலைத் தயாரிக்க சம்பங்கிப் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும்.
இதன் காரணமாக, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களை கொள்முதல் செய்து கர்நாடகம், கேரளா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
விலை உயர்ந்த சம்பங்கிப் பூ பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, முல்லைப் பூக்கள் விலை கிலோ ரூ.2 ஆயிரத்தைத் தாண்டியதால் சம்பங்கிப்பூக்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாள்களாக கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூக்கள், இன்று (ஜன.26) விலை உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நடந்த சம்பங்கி ஏலத்தில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. பூ மார்க்கெட்டுக்குத் தினந்தோறும் 5 டன் பூக்கள் வந்த நிலையில், இன்று(ஜன.26) மல்லிகை, முல்லைப்பூக்கள் 50 கிலோ மட்டுமே வந்திருப்பதால், சம்பங்கி பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், தைப்பூசம் வரை இந்த விலையேற்றம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்ம ஸ்ரீ விருது பெற்ற கோவை மூதாட்டி!