ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடர்ந்த வனப்பகுதியில், மலை உச்சியில் கம்பத்துராயன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த வாரம் மூன்றாவது சனிக்கிழமை பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலுக்கு சென்ற சில இளைஞர்கள் அங்கிருந்த சூலாயுதத்தை எடுத்து விளையாடியதோடு சாமி சிலையை அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டன.
10 பேர் கைது
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்யக்கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து கடம்பூர் காவல்துறையினர், இளைஞர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வந்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், டேவிட், நாகேந்திரன், ராகுல், அபிஷேக், மகேந்திரன், பிரேம்குமார், ராஜேஷ், ஸ்ரீகாந்த், சூரியன் ஆகிய 10 இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் 10 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எஸ்.வி. சேகர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்