தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜுன்.21) கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.
ஆளுநர் உரை
சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதில், வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் தனி நிதி நிலை அறிக்கை சமர்பிக்கப்போவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணியிடம் பேசினோம்.
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்
ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை சமர்ப்பிப்பதை வரவேற்கிறோம். இது விவசாயிகள் நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கை. எந்த ஆட்சியிலும் ஏற்படுத்தாமல், தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தனி பட்ஜெட் போட்டால், வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிய வரும்.
உழவர் சந்தை
விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருளை இடைத்தரகரின்றி, நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய உழவர் சந்தை பேருதவியாக இருந்தது.
அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதுடன், பல்வேறு இடங்களில் புதிதாக நிறுவுவது, விவசாயிகளுக்கு அதிக பயன் கொடுக்கும். லாபகரமான விலையை, உழவர் சந்தையால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, அதனை வலுப்படுத்த வேண்டும்.