ஈரோடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு முதல் தமிழ்நாடு செயலாளராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோபியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சி.சுப்பிரமணியத்தின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இ.கம்யூ. மாநில செயலாளர் ரா. முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, அரசியலைப்புச் சட்டத்தில் இருக்கிற மதச்சார்பின்மை, சோஷியலிசம் என்கிற இரு வார்த்தைகளும் நீக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை போட்டிருக்கிறார்.
அந்த வழக்கிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக விஸ்வம், இந்த வழக்கு நம்முடைய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அரசியல் பிரச்சாரத்திற்காக இந்த வழக்கை சுப்பிரமணியசாமி போட்டுள்ளார் என்றும், தள்ளுபடி செய்வது மட்டுமல்ல இந்த வழக்கிற்கான செலவு தொகையையும் வசூல் செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்.
நாங்கள் கேட்பது சுப்பிரமணிய சாமி பாஜகவின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். அவர் தன்னிச்சையாக இந்த வழக்கை போட்டு இருக்கிறாரா அல்லது பாஜக ஒப்பதலோடு இந்த வழக்கை போட்டுள்ளரா அவர் தன்னிச்சையாக வழக்கு தொடுத்திருந்தால் அவர் மீது பாஜக கட்சி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அது மட்டுமல்ல சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் அல்லது பாஜக ஒப்புதலோடு வழக்கு தொடுத்துள்ளார் என்றால் தேர்தல் ஆணையம் பாஜகவை தடை செய்ய வேண்டும்.