கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு!
ஈரோடு : ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "கரோனா ஊரடங்கு காரணமாக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதனால் ஆன்லைன் வசதி பெறாத மாணவர்கள் பெரும்பாலானோர் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்யும் தேதியை நீட்டிக்க வேண்டும்.
அனைவருக்கும் இணைய சேவை கிடைப்பதை உறுதிப்படுத்திய பிறகு தான் ஆன்லைன் கல்வியை நோக்கி செல்ல வேண்டும். அதுவரை தொலைக்காட்சி வாயிலாகவே கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி வழங்கிட வேண்டும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து முந்தைய ஆண்டின் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.