ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”இன்று நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தததால் வாக்காளிக்கும் வாய்ப்பை இழந்திருந்தேன். தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவு நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளதால், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குப் பின் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. விவசாயத்திற்கும் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுகவிற்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன்.