இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை மத்திய, மாநில அரசுகள் கச்சத்தீவில் கொண்டாடவேண்டும். கச்சத்தீவில் இலங்கை அரசே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு நாம் சுதந்திர தினம் கொண்டாடி நமது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு மாநில அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழர் விரோத போக்கினை கேரள கம்யூனிஸ்ட் அரசு கைவிட வேண்டும். எஸ்.வி சேகர் ஒன்றும் பாஜகவில் இருப்பவர் அல்ல.
விமான நிலையத்தில் பாதுகாப்புக் காவலர் இந்தியில் பேசியதற்கு மத்திய அரசு இந்தி மொழியைத் திணிப்பதாக ஒரு தோற்றத்தையும், திட்டமிட்டு அரசியல் நாடகத்தையும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி செய்துள்ளார். இந்தப் போக்கினை திமுகவும் கனிமொழியும் கைவிட வேண்டும். இல்லையென்றால் திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் முன்பு இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிரானது. நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை உள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தைரியமாக மும்மொழிக் கொள்கையை கொண்டு வர வேண்டும். மக்களும் அதற்கு வரவேற்பு தெரிவிப்பர்.
கறுப்பர் கூட்டம் என்பது திமுகவின் பி டீம். கந்தசஷ்டி கவசத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பித்து, அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் தூய்மையான ஆன்மீக அரசியலை நிலை நாட்டுவார்” என்றார்.