ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கிராமத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஆடு மற்றும் கோழி திருட வந்ததாகக் கூறி, இரண்டு பட்டியலின மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கி, சிறுநீர் கழித்தது தொடர்பாக அடையாளம் தெரியாத 20 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட 20 பேரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஆடு கோழியைத் திருடியவர்களை ஊக்குவிப்பதாக, எதிர் தரப்பைச் சார்ந்தவர்கள் இன்று (டிச.07) போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதேபோல், வழக்குப் பதிவு செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்தவர்களும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், இரு தரப்பினர் இடையே நிலவும் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, கோபிசெட்டிபாளையம் பகுதியில் போராட்டம், பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வழக்கின் பிண்ணனி என்ன?:ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து ஆடு மற்றும் கோழிகள் திருடப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் இரவு நேரங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.