ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்து சென்ற காவல் துறையினர் உணவகத்தில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 194 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. காருடன் அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் உணவகம் நடத்தி வரும் சத்தியமங்கலம் திருநகர் காலணியைச் சேர்ந்த கர்ணன், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் உணவகத்தில் மது விற்பனை செய்வதற்காக மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனர்.