ஈரோடு:பெருந்துறை அருகே அமைந்துள்ளது, சிப்காட் தொழிற்பேட்டை. சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் ஈங்கூர், வரப்பாளையம் காசிப்பில்லாம் பாளையம், எழுதிங்கள் பட்டி, கூத்தம் பாளையம், பனியம்பள்ளி, செங்குளம், பெரிய வெட்டு வா பாளையம், சின்ன வேட்டுவ பாளையம், கடப்பமடை என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக சிப்காட் வளாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது.
இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் சாய தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மாட்டுத்தீவன தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலை, இரும்பு உருக்கு தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை, எரிவாயு உருளை தயாரிப்பு, குளிர்பதனை கிடங்கு என 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இங்கு செயல்பட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட சாய, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொதுமக்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆனது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் புற்று நோய், எலும்பு தேய்மானம், குழந்தை இன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும், குளமும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.