ஈரோடு:கோபிசெட்டிபாளையம் எஸ்.பி. நகர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார்-வனிதா தம்பதி. இவர்களுக்கு பிரணவ், காண்டீவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
காண்டீவ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்புப் படித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாலும், பகல் நேரங்களில் பெற்றோர் பணிக்குச் சென்றுவிடுவதாலும் தனது தாத்தா தணிகாசலத்தின் பராமரிப்பில் இருந்துவருகிறார்.
வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற காண்டீவின் தாத்தா தணிகாசலம், நாள்தோறும் காலையில் தனக்கு விருப்பமான நடிகர் சிவாஜியின் பாடல்களைக் கேட்டவாறே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து காண்டீவும் சிவாஜி பாடல்களைக் கேட்டுவந்துள்ளார்.
சிவாஜி மீது ஈர்ப்பு
இதனால் அந்தச் சிறுவனுக்குச் சிவாஜி மீது ஈர்ப்புவந்து அவரது படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். அதிலும் குறிப்பாகச் சிவாஜி பேசிய வசனங்கள், பாடல்கள், அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் காண்டீவுக்குப் பிடித்துபோக, தாத்தாவிடம் சிவாஜி குறித்து கேட்டு தெரிந்துகொள்ளத் தொடங்கினார்.