கரோனா வைரஸ் பரவலைத் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநிலம் முழுவதும் இன்று முதல் தொடங்கி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலுள்ள 1,769 அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புக்களுக்கு மாணவியர்கள் சேர்க்கை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றது. மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பள்ளி சேர்கைக்கு ஒத்துழைத்தனர்.
மேலும் ஒரு பள்ளியில் படித்து நடப்புக் கல்வியாண்டில், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கையும் இன்று நடைபெற்றது. மாணவர் சேர்க்கைக்கு மாணவ, மாணவியர்களின் பள்ளி இறுதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகளை உடன் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.