ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகிறது. முதல்போக சாகுபடியில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், அரசு சார்பில் இன்று 17 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொடிவேரி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப பாசனப்பகுதியின் அருகில் அமைக்கவேண்டும் எனவும், அரசு நிர்ணயித்துள்ள ஒரு ரூபாய் விலை உயர்வு போதுமானதாக இல்லை என்றும் விவசாயிகளிடையே விவாதிக்கப்பட்டது.