ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடியில் விவசாயம் முக்கியத்தொழிலாக இருக்கிறது. இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக, தக்காளி விலை உயர்வால் தாளவாடி பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.2 முதல் ரூ.3 கொள்முதல் செய்கின்றனர்.
கிலோ ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், கொள்முதல் விலை அதிரடியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மூன்று மாத பயிரான தக்காளி உற்பத்தி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு நாற்றுநடவு, களைஎடுத்தல், உரம் மருந்து என தக்காளி கிலோவுக்கு ரூ.5 வரை செலவாகிறது. கடந்த மூன்று மாதம் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது.
தற்போது ஒரு கிலோ ரூ 2 முதல் ரூ.3 வரை மட்டுமே கொள்முதல் செய்வதால் கட்டுப்படியான விலைகிடைக்கவில்லை என்று கூறும் விவசாயிகள், தக்காளி விலையை விட அவற்றை செடிகளில் இருந்து பறிக்கும் கூலி அதிகம் என்பதால், தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டு விடும் சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தாளவாடி பகுதியில் செடி நட்டு, அதில் கொடியாக தக்காளி சாகுபடி செய்வதால் உற்பத்தி செலவு அதிகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிக விளைச்சல், கர்நாடகத்தில் இருந்து அதிக வரத்து போன்ற காரணங்களால் தக்காளி விலை திடீர் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு பாரம்பரிய பருத்தியை மீட்டெடுக்கும் ஜப்பானியப் பெண்!