சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்துவருகின்றன. தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகின்றன. தாளவாடி மலைப்பகுதியிலிருந்து சத்தியமங்கலத்தை நோக்கி லாரியில் கரும்பு பாரம் ஏற்றிச்செல்பவர்கள் ஆசனூர் சோதனைச் சாவடியில் அதிக உயரமுள்ள கரும்புகளை சாலைகளில் வீசி எரிந்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்தக் கரும்புகளை உண்ண யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு சாலையின் நடுவே நின்றபடி யானை ஒன்று கரும்புத்துண்டுகளை தின்றபடி வெகுநேரமாக நின்றிருந்தது. சாலையில் நின்ற காட்டுயானையைக் கண்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.