ஈரோடு: ஈரோடு அருகே 54 வயதுடைய மத்திய அரசு ஊழியர்தான் பாம்பிடம் நாக்கை நீட்டியதால் அவதிக்குள்ளானவர். இது தொடர்பாக வெளியான தகவலையடுத்து அவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் மருத்துவமனையை அணுகிய போது, நோயாளியின் தனிப்பட்ட தகவல்களை தர முடியாது என்றும் விழிப்புணர்வுக்காக சிகிச்சை விவரங்களை மட்டும் தருவதாக ஒப்புக் கொண்டனர்.
மருத்துவர் செந்தில்குமரன் இது குறித்து நம்மிடம் விவரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் மருத்துவமனைக்கு நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரை அழைத்துவந்தவர்களை விசாரித்த போது பாம்பு நாக்கை கடித்ததால் அதனை துண்டித்ததாக கூறியுள்ளனர்.
நாக்கில் பொதுவாகவே ரத்த ஓட்டம் அதிகம் என்பதால் ரத்தக்குழாய் துண்டிக்கப்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறியது. அத்துடன் பாம்பின் விஷமும் உடலில் பரவத் துவங்கியிருந்தது. இக்கட்டான நிலையில் சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்ற போராடியதாக விவரிக்கிறார் மருத்துவர் செந்தில் குமரன்.
நாக்கிலிருந்து வெளியேறிய ரத்தம் மூச்சுப்பாதையை அடைத்ததால் மூச்சு விடவும் சிரமப்பட்ட அந்த நபருக்கு , செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் விஷமுறிவு மருந்தும் அளித்து, அறுவை சிகிச்சையும் செய்து நாக்கை திரும்ப ஒட்ட வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 7 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர். அந்த நபர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி விட்டார் என மருத்துவர் கூறியுள்ளார்.
நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் அளித்த தகவலின் படி, அவருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தனது வீட்டாரிடம் கூறிய போது ஜோதிடர் ஒருவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் இந்த குடும்பத்தை ஈரோட்டில் பாம்பு புற்று வைத்து வழிபடும் சாமியார் ஒருவரிடம் அனுப்பியுள்ளார்.