ஈரோட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் ஈரோடு:தமிழகத்தில்வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழை சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.
ஈரோடு நகர் பகுதியில் பன்னீர் செல்வம் பூங்கா, மூலப்பாலையம், கருங்கல்பாளையம், அன்னை சத்யாநகர், கொல்லம்பாளையம், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி வலசு உள்ளிட்ட இடங்களில் கன மழையானது வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, பவானி சாலையில் உள்ள அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே உள்ள ஓடையில் மழை நீர் நிரம்பியது.
இதன் தொடர்ச்சியாக, அருகாமையில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதனால், தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த எலட்ரானிக் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்றவை மழைநீரில் சேதமாகின. இருசக்கர வாகனங்களும் நீரில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், மழைநீர் வீடுகளுக்குள் வருவதால் பல்வேறு நோய்களில் தாக்கம் ஏற்படுகிறது என்றும், பாம்பு, தேள் போன்ற விஷப்பிராணிகள் போன்றவை வீடுகளுக்குள் வருகின்றன என்றும் கூறியுள்ளனர். மேலும், வாக்கு சேகரிக்கும்போது மட்டுமே அரசியல் கட்சியினர் இப்பகுதிக்கு வருகின்றனர், மற்ற நாட்களில் கண்டு கொள்வதில்லை என வேதனை தெரிவித்தனர்.
நாங்கள் எவ்வளவு துன்பப்படுகிறோம் என்று அக்கறை கொள்வதில்லை என்றும், ஏரிகளை முறையாக தூர்வாராத காரணத்தினால் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த முறையும் இதேபோல குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததையடுத்து, அமைச்சர் முத்துசாமி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, இது போல மீண்டும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால், தற்போது மீண்டும் அதே போல் நிகழ்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:எதிர்பாராத விதமாக ஆம்னி வேனில் கிளம்பிய புகை.. நொடியில் எலும்புக்கூடான வேன்…பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!