ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இவை தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக அதிக பாசனப் பரப்பளவை கொண்டதாகும்.
அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளா ஆகிய இடங்களில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சென்ற ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காகத் திறந்துவிடப்பட்டது.
நீலகிரி பில்லூர் அணையிலிருந்து தினந்தோறும் மின் உற்பத்திக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், அதிக நீர்வரத்தின் காரணமாகவும் 54 நாள்களாக அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் நீடித்துவருகிறது. இதற்கிடையே சில நாள்கள் நீர்வரத்து குறைந்தபோதிலும், அணையின் நீர்மட்டம் அரை அடி சரிவதும், பின் மீண்டும் உயருவதுமாக இருந்தது.
பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்குப் பொதுப்பணித் துறை பரிந்துரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவுடன் நீடிப்பதால் அணையிலிருந்து எள், கடலை போன்ற பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பொதுப்பணித் துறையினர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம்!